உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் இன்று 434வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரிம்லினை குறிவைத்து நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அதிபர் புதினை கொலை செய்ய 2 டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அதிபர் மாளிகை மீது 2 டிரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும் அந்த 2 டிரோன்களும் மின்சார ரேடார் மூலம் வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிபர் மாளிகையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த டிரோன் தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என கூறியுள்ள ரஷ்யா இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

டிரோன் தாக்குதல் முயற்சி நடந்த சமயத்தில் புதின் அதிபர் மாளிகையில் இல்லை என்றும் அவர் மாஸ்கோ நகருக்கு வெளியே ஒடின்ஸ்வொஸ்கை மாவட்டத்தில் உள்ள தனது பங்களாவான நொவொ- ஒயொவாவில் தங்கி இருந்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அதிபர் புதினை கொலை செய்ய நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக கூறியுள்ள ரஷ்யா இந்த தாக்குதல் முயற்சி உக்ரைனால் நடந்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்றும் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.