தென் கொரியத் தலைநகர் சியோலில் இருக்கும் லீயம் கலை மியூசியத்திற்கு அங்குள்ள மாணவர் ஒருவர் சென்றுள்ளார்.

அங்கே மியூசியத்தில் டேப்பில் வாழைப்பழம் ஒட்டப்பட்டிருந்த நிலையில் அதை எடுத்து அவர் சாப்பிட்டுவிட்டார்.

காலை உணவு சாப்பிடவில்லை எனவும் இதனால் அங்கு வந்ததும் தனக்குப் பசித்தாக தெரிவித்த அவர், இதன் காரணமாகவே சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழத்தைச் சாப்பிட்டதாக தெரிவித்தார்.

இதை ஏதோ சும்மா சுவரில் வைத்துள்ள வாழைப்பழம் என நினைத்து விடாதீர்கள். இது மிக முக்கிய கலைப்படைப்பாம்.

இது 'காமெடியன்' எனப்படும் நிறுவப்பட்ட கலைப்படைப்பின் ஒரு பகுதியாக இருந்தது.

இதை கேட்டலன் என்பவர் உருவாக்கியிருந்தார். கலை உலகில் இதை முக்கியமான ஒன்றாகவே பார்க்கிறார்கள்.

இது என்ன அதிகபட்சம் சில நூறு ரூபாய் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது கடந்த டிசம்பர் 2019இல் ஆர்ட் பாசல் மியாமி பீச் என்ற அமைப்பிற்கு 120,000 டொலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 98 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதுபோன்ற மற்ற இரு படைப்புகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டன.

இந்த 98 லட்ச ரூபாய் மதிப்பிலான கலைப்படைப்பை தான் அந்த மாணவர் எடுத்துச் சாப்பிட்டுள்ளார். இது சம்பவம் குறித்து இதை உருவாக்கிய கேட்டலனிடம் சொல்லப்பட்டதாம். இருப்பினும் அவர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அந்த மியூசியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவர் டேப்பில் வாழைப்பழ தோலை ஓட்டிய நிலையில், அது அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக புதிய வாழைப்பழம் வைக்கப்பட்டது.

மேலும் அந்த மாணவன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால் பொதுவாகவே இந்த கலைப்படைப்பில் உள்ள வாழைப்பழம் 2,3 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுமாம். இதனால் அந்த மாணவர் மீது புகார் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.