ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான போர் நீடித்து வருகிறது. 

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருவதால் ரஷ்ய ராணுவத்துக்கு உக்ரைன் ஈடுகொடுத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யா மீது கொண்டு வரப்பட்ட எந்த தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை. மேலும், ரஷ்யா மீது அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையையும் இந்தியா பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில் இந்தியாவை சீண்டும் வகையில் உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த 30 ஆம் திகதி ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டது.

அதில், ஏவுகணைத் தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து கிளம்பும் கரும்புகைக்கு மேலே, ஹாலிவுட் கவிர்ச்சி நடிகை மர்லின் மன்றோ 'ஸ்கர்ட்' அணிந்து போஸ் கொடுக்கும் ஓவியம் கறுப்பு நிறத்தில் வரையப்பட்டிருந்தது.

ஆனால், அந்த ஓவியம் இந்தியர்கள் வணங்கும் பெண் கடவுள் காளியை போல இருந்தது. காளியை போலவே நாக்கை வெளியே நீட்டியும், மண்டை ஓடு மாலை அணிந்திருந்தும் அந்த ஓவியம் காணப்பட்டது.

இதையடுத்து, உக்ரைன் பாதுகாப்புத் துறையின் இந்த செயலுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொதித்தெழுந்து கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்தியர்கள் இப்படிப்பட்ட எதிர்வினை ஆற்றுவார்கள் என சற்றும் எதிர்பார்க்காத உக்ரைன் இராணுவம், இன்று அந்த ஓவியத்துடன் கூடிய ட்விட்டை நீக்கியது. இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எமினி ட்சாப்ரோவோ கூறுகையில், "இந்தியக் கடவுள் காளியை தவறாக சித்தரித்ததற்காக உக்ரைன் அரசு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறது. இந்தியாவின் கலாச்சாரத்தையும், இந்தியா எங்களுக்கு தரும் ஆதரவையும் நாங்கள் மதிக்கிறோம். அந்த ஓவியம் பதிவிடப்பட்ட ட்வீட் நீக்கப்பட்டுவிட்டது" என்றார்.