சூடான் நெருக்கடிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆக்லாந்தில் உள்ள சூடான் மக்கள் சமூகத்தினர் இன்று Aotea சதுக்கத்தில் கூடினர்.

சூடானில் உள்நாட்டு போர் உச்சத்தில் உள்ளது. பொதுவாக உள்நாட்டு போர் என்பது அரசுக்கும் - மக்களுக்கும் இடையில் நடக்கலாம். அரசுக்கும் போராளிகளுக்கும் இடையில் நடக்கலாம். அரசுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கூட நடக்கலாம்.

ஆனால் சூடானில் நடப்பது அங்கே இருக்கும் இரண்டு வகையான இராணுவ படைகளுக்கு இடையிலான மோதல். அங்கே உள்ள இராணுவம் மற்றும் ஆர்எஸ்எப் எனப்படும் ராபிட் சப்போர்ட் போர்ஸ் இடையே இந்த மோதல் நடக்கிறது.

கடந்த 2021ல் சூடானில் ஆட்சியை கவிழ்த்த போது இந்த இரண்டு தரப்பும் ஒன்றாகவே இருந்தன. ஆனால் கடந்த சில காலமாக இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

சமீபத்தில் ஆர்எஸ் எப் அமைப்பை இராணுவத்துடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

அப்போதுதான் நாட்டை யார் ஆள்வது? இராணுவத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தற்போது அங்கு மிகப்பெரிய உள்நாட்டு போராக மாறி உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், சூடானின் தலைநகரான கார்ட்டூமில், நாட்டின் இரண்டு உயர்மட்ட ஜெனரல்கள் அதிகாரத்திற்காக போராடும் போது வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையால் 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு கோரி ஆக்லாந்தில் உள்ள சூடான் மக்கள் சமூகம் Aotea சதுக்கத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் ஏற்பாட்டாளர் ரஹ்மான் பஷீர் கூறுகையில், உலகளாவிய மற்றும் உள்ளூர் ஆதரவு இல்லாததால் சூடான் மக்கள் தாங்களாகவே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வளவு தொலைவில் இருப்பதால் நாங்கள் மிகவும் உதவியற்றவர்களாக உணர்கிறோம். எங்கள் குடும்பங்கள் தோட்டாக்கள் மற்றும் பீரங்கிகளுக்கு எதிராக ஒளிந்து கொண்டுள்ளனர்.

நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறோம்.

சூடான் மக்களுக்காக அரசாங்கம் சிறப்பு அகதிகள் வகைப்பாட்டைக் கொண்டுவர வேண்டும்.

எங்கள் குடும்பங்களை இங்கு கொண்டு வர விரும்புகிறோம்.  சிரிய நெருக்கடிக்காகவும், ஆப்கானியர் நெருக்கடிக்காகவும், உக்ரேனிய நெருக்கடிக்காகவும் அரசாங்கம் இதை செய்தது.  இது ஒரு பெரிய மனிதாபிமான நெருக்கடியாகும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் கார்ட்டூம் மற்றும் அண்டை மாநிலங்களில் குறைந்தது 70% மருத்துவமனைகள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என‌ சூடானிய GP மருத்துவர் அலா ஃபரா தெரிவித்தார்.

உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு மருத்துவராக, நான் நிலைமையை மிகவும் நெருக்கமாகப் கவனித்து வருகிறேன், நான் கவலைப்படுகிறேன்.  நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகள் கிடைப்பதில்லை.

நகரம் முழுவதும் மின்வெட்டு காரணமாக சூடானில் உள்ள குடும்பங்களைத் தொடர்புகொள்வது சவாலாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

எங்களுக்கு ஆதரவு தேவை.  இங்கு நியூசிலாந்தில் உள்ள எங்கள் குடும்பங்கள் எழுந்து நின்று, சூடான் மக்களுக்குத் தேவையான ஆதரவைப் பெற எங்களுக்கு உதவப் போகிறார்கள் என்ற உறுதி எங்களுக்குத் தேவை என்கிறார் ஃபரா.

சூடானின் நிலைமை குறித்து மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.