இந்தியா: தமிழ்நாடு

கடந்த 16 ஆம் திகதி அதிமுக செயற்குழு நடந்தது. எடப்பாடி தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுவில் பாஜக உள்ளிட்ட எந்த கட்சி பற்றியும் விவாதிக்க கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் திமுகவை பற்றி நீண்ட விவாதம் நடந்து இருக்கிறது. பல்வேறு பிரச்சனைகளில் திமுக அரசை கண்டிக்கும் தீர்மானங்கள் உட்பட 15 தீர்மானங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார்.

இந்த நிலையில்தான் செயற்குழு கூட்டம் முடிந்ததும் எடப்பாடியை சந்தித்து முக்கிய உறுப்பினர்கள் பலரும் பேசினர். அப்போதுதான் அண்ணாமலை பற்றிய பேச்சும் வந்து இருக்கிறது. அண்ணாமலையை பற்றி சிலபல கேள்விகளை கேட்டுள்ளனர் உறுப்பினர்கள்.

அதாவது கூட்டம் முடிந்து வெளியே நடந்த பேச்சு வார்த்தையில் இதை விவாதித்து உள்ளனர். அப்போது, "அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காதீர்கள். அந்த நபரை புறக்கணிக்க பழகிக் கொள்ளுங்கள். நம்பிக்கைக்கு உரியவராகவும் அவர் இல்லை.

நம்பகத்தன்மை உள்ளவராகவும் இல்லை. நம் கழகத்துக்கு அந்த நபரெல்லாம் சாதாரணம். நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக தலைவர் பதவியில் இருக்க மாட்டார். கர்நாடாக தேர்தல் முடிந்ததுமே கூட அவர் கட்டம் கட்டப்படலாம்  என்று அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தாராம் எடப்பாடி பழனிச்சாமி.

தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் - பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது.

சமீபத்தில் திமுகவின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில் அதிமுகவிற்கு எதிராகவும் சில விடயங்களை அண்ணாமலை பேசினார்.

அதாவது அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாக மறைமுகமாக கருத்து சொன்னார்.

இதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி, அண்ணாமலை பற்றி என்னிடம் கேட்காதீங்க. அவரை பற்றி என்னிடம் பேச வேண்டாம்.

முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். அவர் இப்படி பேசி பேசித்தான் பிரபலம் ஆகி உள்ளார். அவர் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகி உள்ளார்.

அவர் ஊழல் பட்டியலை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. சொத்து பட்டியலை வெளியிட்டதாகவே தெரிகிறது என்று கூறியமை குறிப்பிடத்தக்கது.