இந்தியா: தமிழ்நாடு

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி DMK Files என்ற பெயரில் திமுக முக்கிய பிரமுகர்கள் மீது அண்ணாமலை சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.

இதையடுத்து இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க அண்ணாமலைக்கு 48 மணி நேரம் கெடு விதித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது திமுக. அதுமட்டுமல்ல அவதூறுகளை அள்ளி வீசியதற்காக ரூ.500 கோடி இழப்பீடுத் தொகையும் அண்ணாமலையிடம் திமுக கேட்டிருக்கிறது.

இந்நிலையில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற திமுக இப்தார் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலையை சும்மா விட மாட்டோம் என சூடாக தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களால் அண்ணாமலையிடம் கேள்வி கேட்க முடிந்ததா என்று வினவிய அவர் ஏதோ ஸ்கூல் டீச்சர் போல் அண்ணாமலை பாடம் எடுக்கிறார், அதைக்கேட்டு விட்டு நீங்களும் வருகிறீர்களே என செய்தியாளர்கள் மீதான தனது ஆதங்கத்தை கொட்டினார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு பக்கம் அவதூறு வழக்கு தொடரவுள்ள நிலையில், தானும் அண்ணாமலை மீது தனியாக ஒரு மான நஷ்ட வழக்கு தொடருவேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இவர் கூறுவதை வைத்து பார்த்தால் எந்தெந்த திமுக பிரமுகர்கள் மீது அண்ணாமலை குற்றஞ்சாட்டினாரோ, அவர்கள் அனைவரும் தனி தனியாக மான நஷ்ட வழக்கு தொடரும் திட்டத்தில் இருப்பது தெரிகிறது.