நிங்கலூ கிரகணம் என்று அழைக்கப்படும் ஒரு ஹைபிரிட் சூரிய கிரகணம் ஆஸ்திரேலியாவின் வடமேற்கு மூலையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை நிகழ உள்ளது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிங்காலூ கிரகணம் ஹைபிரிட் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் உலகின் சில பகுதிகளில் இது வளைய கிரகணமாக தோன்றும் முன், முழு கிரகணமாக மாறும் என்று கூறப்படுகிறது. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்காது, அதற்கு பதிலாக, அது சூரியன் மீது ஒரு சிறிய இருண்ட வட்டம் போல் தோன்றும், இது “நெருப்பு வளையம்” விளைவால் உருவாகிறது.

முழு சூரிய கிரகணம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும். அதனால் இந்த கிரகணத்திற்கு ஆஸ்திரேலியாவின் “நிங்கலூ” என்ற கடற்கரையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்தியாவில் இந்த கிரகணத்தை முழுமையாகவோ, பகுதியளவாகவோ பார்க்க முடியாது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள Exmouth நகரத்தில் மட்டுமே முழு கிரகணம் தெரியும். Exmouth இலிருந்து பார்க்கும்போது, ​​ஆஸ்திரேலிய நேரம் காலை 11.30 மணிக்கு (நியூசிலாந்து நேரப்படி மாலை 3.30 மணியளவில்) ஒரு நிமிடத்திற்கு சூரியன் முற்றாக மறைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில், கிரகணம் அரிதாகவே கவனிக்கப்படும், ஆக்லாந்தில் மாலை 5.10 மணிக்கு பகுதியளவு கிரகணம் ஏற்படும் என்று ஸ்டார்டோம் கூறுகிறது, அப்போது சந்திரனின் மெல்லிய பகுதி சூரியனின் மெல்லிய பகுதிக்கு முன்னால் செல்லும்.

தென்கிழக்கு ஆசியா, கிழக்கிந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இருந்தால் பகுதி அளவு கிரகணத்தை காண முடியும் என்று முன்னாள் நாசா வானியல் இயற்பியலாளரும் கிரகண நிபுணருமான பிரெட் எஸ்பெனாக் கூறுகிறார்.