ஹமில்டனில் சட்டவிரோத தெருப் பந்தயத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தெருப் பந்தயத்தில் ஒரு நபர் தாக்கப்பட்டதாகவும் மற்றும் பெயிண்ட்பால் துப்பாக்கியால் சிசிடிவி கேமராக்கள் சுடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வாகனங்களை ஆபத்தான முறையில் ஒட்டுவதாகவும், மற்றும் ஒருவர் சிசிடிவி கேமராவில் பெயின்ட்பால் துப்பாக்கியால் சுட்டதாகவும் கிடைக்கப் பெற்ற புகார்களுக்குப் பிறகு, Chartwell இல் உள்ள Pardoa Boulevard இற்கு அதிகாரிகள் விரைந்து வந்தனர். நள்ளிரவு 12.50 மணியளவில் இந்த சம்பவங்கள் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அதிகாரிகள் வருவதற்குள் அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்றதாக இன்ஸ்பெக்டர் வில் லௌரின் கூறினார். சிறிது நேரத்தின் பின்னர் Collins சாலை மற்றும் Ohaupo சாலைக்கு அருகில் அந்த குழுவினர் நபர் ஒருவரை தாக்கி அவரது வாகனத்தை திருடிச் சென்றனர். இதனையடுத்து ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர். பின்னர் அந்த பகுதிக்கு கணிசமான அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக லௌரின் கூறினார். கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும், 37 உரிமை மீறல் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு, ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் Collins மற்றும் Ohaupo சாலைகளுக்கு அருகே நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடந்து வருவதாக லௌரின் கூறினார். இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், 105 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.