இலங்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் எந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களைக் கவனித்துக்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் சிறைச்சாலைகளில் தற்போது சுமார் 26,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 8,000 பேர் குற்றவாளிகள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் வழங்கும் வசதிகளுக்கு மேலதிகமாக சிறைக்கைதிகளுக்கு தேவையான நலன்புரி வசதிகளை வழங்குவதற்கு ஆய்வுக்குழுக்கள் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

1934 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக இலங்கையில் மனிதாபிமான முறையில் சிறைச்சாலை விதிமுறைகளில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளுக்குள் 06 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சிறு குற்றங்களைச் செய்தவர்களை வீட்டுக் காவலில் வைக்க முடியுமா என்பதை ஆராய்வதற்கான சட்டங்களை தயாரிப்பதற்கு ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.