இந்தியா: தமிழ்நாடு

பணத்தை பறித்துக்கொண்டு கடனாளி ஆக்குவதோடு பல மனித உயிர்களை காவு வாங்கியது ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடிவாளம் போடும் வகையில், தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் திகதி 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை' விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இந்த மசோதா கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால் கவர்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. உயிர்ப்பலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றால் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

பல மாதங்கள் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் இருந்த
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் 8 ஆம் திகதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

இது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பிய மறுநாளே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி கவர்னருக்கு மீண்டும் அனுப்பிவைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த மாதம் 24-ந் திகதி மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த முறையாவது கவர்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிடுவார் என்று தமிழக மக்கள் மிகவும் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தனர். இதற்கிடையே, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களோடு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 6-ந் தேதி கலந்துரையாடினார். அப்போது மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "மசோதா நிலுவையில் இருக்கிறது என்றால், ஒப்புதல் வழங்கவில்லை என்றுதான் அர்த்தம்" என்று பேசினார்.

கவர்னரின் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், தமிழக சட்டசபையில் கவர்னருக்கு எதிராக நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாக தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. மு.க.ஸ்டாலின் துரிதமாகவும், தொடர்ச்சியாகவும் எடுத்த நடவடிக்கையால் நேற்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒரு வழியாக 172 நாட்களுக்கு பிறகு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.