இந்தியா: தமிழ்நாடு

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் தெப்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் தம்பதி
பொம்மன் -பெள்ளி.

பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் யானை பராமரிப்பாளர்களாக உள்ளனர். இந்நிலையில் தாயை பிரிந்த 2 குட்டி யானைகளை இவர்கள் பராமரித்தனர். ரகு, பொம்மி என பெயரிடப்பட்ட அந்த யானைகளை சொந்த குழந்தைகள் போல் இருவரும் பராமரித்தனர்.

இந்த யானைகளை இந்த தம்பதி எப்படி பராமரித்தனர் என்பதை மையமாக கொண்டு ‛தி எலிபெண்ட் விஸ்பரரஸ்' என்ற பெயரில் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது.

இந்த ஆவணப்படத்துக்கு சமீபத்தில் ஆஸ்கர் விருது கிடைத்து. இதையடுத்து பொம்மன்-பெள்ளி தம்பதி உலகம் முழுவதும் புகழ் பெற்றனர். இருவரையும் பார்க்க ஏராளாமனவர்கள் தெப்பக்காடு கிராமத்துக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்றார்.

அங்கு ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை அவர் சந்தித்து கலந்துரையாடி இருவரையும் பாராட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தங்களிடம் கலந்துரையாடியது பற்றி பெள்ளி கூறியதாவது...

பிரதமர் மோடி இன்று காலையில் காரில் இறங்கி வந்து எங்களை சந்தித்தார். கரும்பை எடுத்து ரகு, பொம்மிக்கு(2ம் அவர்கள் வளர்த்த யானைக்குட்டிகள்) கொடுத்தார். யானைகுட்டிகளை எப்படி வளர்த்தீர்கள் என்பது எனக்கு இப்போது தான் தெரியும். உங்களை போல் கர்நாடகா, கேரளாவில் யாரும் யானைக்குட்டிகளை வளர்க்கவில்லை என கூறினார்.

மேலும் டெல்லிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என அழைத்தார். அதற்கு நாங்கள் நீங்கள் இங்கு வந்ததே பெருமையாக இருக்கிறது. உங்களை நாங்கள் பார்த்துவிட்டோம் என்றோம். அதற்கு இல்லை இல்லை.. டெல்லிக்கு கண்டிப்பாக 2 பேரும் வர வேண்டும் என்றார். ஒரே முடிவு வந்துதான் ஆக வேண்டும் என்றார். இதையடுத்து ஒன்றாக போட்டோ எடுத்து கொண்டோம் என நெகிழ்ச்சியாக கூறினார்.