இந்தியா: தமிழ்நாடு

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்தகட்ட நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். உறுப்பினர் சேர்க்கை கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி முதல் தொடங்கியுள்ளது.

புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் முகாமை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் குமார் நகரில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் மாநகர மாவட்ட செயலாளரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

இதில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார், பல்லடம் எம்எல்ஏ எம்எஸ் ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த வார்டு செயலாளர்களிடம் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது திருப்பூர் மாநகராட்சி 25வது வார்டு செயலாளரும், கவுன்சிலருமான தங்கராஜிடம் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கியபோது, அதே வார்டை சேர்ந்த அதிமுக நிர்வாகி பழனிச்சாமி என்பவர் தன்னிடம் படிவத்தை வழங்குமாறு கூறியுள்ளார்.

இதனால், அதிமுக நிர்வாகி பழனிசாமிக்கும் கவுன்சிலர் தங்கராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதையடுத்து முன்னாள் அமைச்சரும் பல்லடம் எம்.எல்.ஏவுமான எம்.எஸ்.எம் ஆனந்தன் சமரசம் செய்து வைக்க முயன்றபோது பழனிசாமி, அவரையும் தாக்க முயன்றார். மற்ற நிர்வாகிகள் இருவரையும் தடுத்து பழனிசாமியை வெளியே அழைத்துச் சென்றனர்.

அதிமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனால் முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஆனந்தன் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.