வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்ற நெடுநாள் கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. அது விடை தெரியாத மர்மமாகவே இருந்து வருகிறது.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்களும் நீண்ட காலமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வானில் ஏற்படும் சில மாற்றங்களும் நமக்கு ஏலியன்கள் நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. இத்தாலியில் அப்படித்தான் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம் இறுதியில் மத்திய இத்தாலியின் சில பகுதிகளில் வானத்தை மூடும் வகையில் சிவப்பு ஒளியின் மர்ம வளையத்தைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர்.

இது குறித்த படங்களைப் பலரும் எடுத்த நிலையில், அதில் ஒன்று இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இத்தாலிய ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள போசாக்னோ என்ற சிறிய நகரில் தோன்றிய இந்த வினோதமான வளையத்தை பினோட்டோ என்பவர் போட்டோ எடுத்துள்ளார். மத்திய இத்தாலியில் இது தோன்றியபோது, இந்த பெரிய வட்டம் குறைந்தது 360 கிலோமீட்டர் விட்டத்தில் இருந்ததாகவும் ட்ரியாடிக் கடல் வரை அப்பகுதியை நீண்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஆய்வாளர் ஒருவர் கூறுகையில்...

இதன் விட்டம் 100 முதல் 600 கிமீ வரை இருக்கும். இத்தாலி, பிரான்ஸ், குரோஷியா, ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி நாடுகளில் இதுபோல் தோன்றியுள்ளதை நான் புகைப்படம் எடுத்துள்ளேன் என்றார்.

இது ஏலியன்கள் வரும் ஸ்பேஸ் ஷிப்பாக இருக்குமோ என்றும் கூட சிலர் கேள்வி எழுப்புகிறார்கள், ஆனால், இது ஸ்பேஸ் ஷிப் இல்லை. இந்த வினோத ஒளிவட்டம் என்பது எல்வ் (Elve) என்று அழைக்கப்படும்.‌ அதாவது ஒளியின் உமிழ்வு மற்றும் மிகக் குறைந்த அதிர்வெண் இடையூறாகும். தெற்கே 285 கிமீ தொலைவில் உள்ள அன்கோனா அருகே புயலில் ஏற்பட்ட கடுமையான மின்னலால் எல்வ் உருவாகுகிறது.

எல்வ்ஸ் என்பது ஒரு அரிய வகை ஸ்ப்ரைட் ஆகும். இது மழை மேகத்திற்கு மேல் ஏற்படும் பெரிய அளவிலான மின் வெளியேற்றம் ஆகும். மின்னல் ஒன்று மிகவும் வலுவாக இருக்கும் போது அது ஒரு தீவிர மின்காந்த துடிப்பை உருவாக்கியது.‌ அது பூமியின் அயனோஸ்பியரை தாக்கும் போது சிவப்பு வளையம் ஏற்படுகிறது.

ஒரு சாதாரண மின்னல் என்பது 10 முதல் 30 கிலோ ஆம்பியர் மின்னோட்டத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்த வளையத்தை ஏற்படுத்தும் மின்னல் வழக்கமான மின்னலை விட சுமார் 10 மடங்கு வலிமையானது.

இது குறித்து ஆய்வாளர் கூறுகையில், இது வலுவான மின்னலால் ஏற்படும் நிகழ்வு. அவ்வளவுதான், இதை ஏலியன் விசிட் என்றெல்லாம் நாம் கருதத் தேவையில்லை என்றார்