இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழ்நாட்டு விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் தான். டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் மத்திய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும் - தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி. #விவசாயம் காப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.