இந்தியா: தமிழ்நாடு

பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று மதியம் 2.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைய உள்ளார்.

அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் வரவேற்க உள்ளனர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கவுள்ளார்.

இதனையடுத்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை-கோவை 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு வந்து அங்கு நடைபெறும் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்க உள்ளார்.

பின்னர் பிரதமர் பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.

இதில், தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரெயில் சேவை, நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரெயில்பாதை திட்டம், மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டம் ஆகியவற்றை காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

திருமங்கலம் - வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) 4 வழிச் சாலை திட்டத்துக்கும், வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார்.

அதன்பிறகு சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 7.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரு சென்றடைய உள்ளார்.

பின்னர் நாளை காலை நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகை தந்து பார்வையிட உள்ளார்.

பின்னர் புறப்பட்டு கர்நாடகா மாநிலம் மைசூருக்கு காலை 10.20 மணியளவில் புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையையொட்டி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனையின் பேரில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்ற உளவுப்பிரிவு போலீசார் எச்சரிக்கையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.