நியூசிலாந்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொள்ளை சம்பவங்களை அடுத்து வணிகநிலையங்களின் உரிமையாளர்கள் பாதுகாப்பற்றவர்களாகவும் உதவியற்றவர்களாகவும் உணர்வதாகவும் அதிகாரிகள் மீது நம்பிக்கையை இழந்திருப்பதாகவும் வணிக அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வணிகநிலையங்களில் இடம்பெறும் கொள்ளை சம்பவங்களில் பொருள் இழப்புகள் மட்டுமன்றி உடல் ரீதியாக தாக்கப்படுதல் மற்றும் உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.

இவ்வாறு கடந்த வருடம் ஆக்லாந்து Dairy Shop இல் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் ஜனக் பட்டேல் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

இதனிடையே நேற்று முன்தினம் ஹமில்டனில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் தொழிலாளி ஒருவர் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மக்கள் தங்கள் வேலைகளை பாதுகாப்பாக உணரவில்லை என்று Dairy மற்றும் வணிக உரிமையாளர்கள் குழுமத்தின் தலைவர் சன்னி கௌஷல் தெரிவித்தார்.

தற்போதைய அதிகாரிகள் மற்றும் சட்ட ஒழுங்கு மீது அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, ஏனெனில் அது தற்போது முழுவதும் சிதைந்துள்ளது. யாரும் பாதுகாப்பாக உணரவில்லை என்று அவர் கூறினார்.

வணிக உரிமையாளர்கள் உதவியற்றவர்களாக உணர்கிறார்கள்.

நமது நீதித்துறையில் பொறுப்புக்கூறல் இல்லை என்று மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

இளைஞர்களின் குற்றங்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் நாட்டில் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும் இல்லையெனில் பிரச்சினை தீர்க்கப்படாது என தெரிவித்தார்.