தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் மக்கள் எந்த நேரமும் செல்போனும் கையுமாக அலைவதை காண முடிகிறது.

அதிலும் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு உணவு இல்லாமல் கூட இருந்து விடலாம் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

இதனால் ஜப்பானில் உள்ள ஒரு உணவு விடுதி ஒன்று தங்கள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான கண்டிஷனை போட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தெபு- ஷான் என்ற உணவகம், பிசியான நேரங்களின் போது வாடிக்கையாளர்கள் செல்போன் பயன்படுத்திக்கொண்டே சாப்பிடக் கூடாது என்று கடுமையான ஒரு நிபந்தனையை விதித்துள்ளது.

ஜப்பான் உணவகத்தின் இந்த நடவடிக்கை அந்த நாட்டில் சமூக வலைத்தளங்களில் மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது குறித்து உணவு விடுதியின் உரிமையாளர் கூறியதாவது...

ஒருமுறை நாங்கள் மிகவும் பிசியாக இருந்தோம். வாடிக்கையாளர்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. அப்போது ஒரு வாடிக்கையாளர் 4 நிமிடங்கள் ஆகியும் அவர் முன் இருந்த உணவை சாப்பிடாமல் செல்போன் பயன்படுத்திக் கொண்டே இருந்தார். அதன்பிறகே இப்படி ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வர முடிவு செய்தோம். பொதுவாகவே வாடிக்கையாளர்கள் சாப்பிட வேண்டிய நேரத்தில், தங்கள் ஸ்மார்ட் போன்களில் வீடியோக்களை பார்த்துக் கொண்டே நேரம் கடத்தி விடுகிறார்கள் என்றார்.