துருக்கி- சிரியா எல்லையில் கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிக உயரமான கட்டடங்கள் சரிந்து விழுந்தன.

இந்த இடிபாடுகளில் சிக்கி தோராயமாக 50 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில் நிலநடுக்க மீட்பு பணிகளின் போது கட்டடத்தின் இடிபாடுகளை மீட்பு படையினர் அகற்றினர்.

அப்போது பூகம்பத்தில் பூத்த பூ ஒன்று அதாவது பிறந்து தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் ஒரு குழந்தை இருந்தது. அதை உடனடியாக மீட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த குழந்தையின் தாய் தந்தை நிலநடுக்கத்தில் சிக்கி இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அந்த குழந்தையை எல்லாரும் அதிசய குழந்தை என்றே அழைத்தனர். அது ஒரு பெண் குழந்தை.

இந்நிலையில் இந்த குழந்தையின் தாய் யாஸ்மின் பெக்தாஸ் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

அவர் ஹத்தே மாகாணத்தில் ஒரு சிதிலமடைந்த கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டு வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் பின்னர் செய்தித் தாள்கள், டிவி சேனல்களை பார்த்து தனது மகள் உயிருடன் இருப்பதை அந்த தாய் யாஸ்மின் அறிந்து கொண்டு அரசை தொடர்பு கொண்டுள்ளார். எனினும் அவருக்கும் அந்த குழந்தைக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் இருவரது முடிவுகளும் ஒன்று போல் இருந்தது. இதையடுத்து 54 நாட்கள் கழித்து தனது தாயின் அரவணைப்பிற்கு சென்றது அந்த குழந்தை.

இதுகுறித்து துருக்கி அமைச்சர் தேர்யா யானிக் கூறுகையில் உலகிலேயே விலைமதிப்பில்லாத ஒரு வேலை என்றால் அது தாயையும் குழந்தையையும் ஒன்று சேர்ப்பதுதான் அங்காராவில் இருந்து அந்த குழந்தை தாய் இருக்கும் மருத்துவமனைக்கு வந்துள்ளது. அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த குழந்தை எங்களுக்கும் குழந்தைதான். குழந்தை உண்மையில் அதிசய குழந்தைதான். அந்த குழந்தையை மீட்கும் போது அவருக்கு எந்த வித உடல்நல பாதிப்புகளும் இல்லாமல் இருந்தது என அமைச்சர் கூறியுள்ளார்.