இந்தியா: தமிழ்நாடு

மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.

அங்கு நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, சாமி தரிசனம் செய்து, கோவிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கஞ்சா கருப்பு, மானாமதுரை அருகே உள்ள முருகன் கோவிலில் இன்று மண்டல பூஜை, பால்குடம் திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தேன். இதனை தொடர்ந்து சமயபுரம் முத்துமாரியம்மனுக்கு அக்னி சட்டி எடுக்கப்போகிறேன். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக ஆனதற்கும், அடுத்து முதலமைச்சராக ஆவதற்கும் நான் அக்னி சட்டி எடுக்கப்போகிறேன்.

கூடிய விரைவில் தமிழ்நாட்டில் நேர்மையான நல்லாட்சி அமைய உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்திருந்தால், மின் கட்டணம் அதிகரித்து இருக்காது. தற்போது மின்சார கட்டணம் வீட்டு வரி என்பன அதிகரித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி விரைவில் ஆட்சிக்கு வருவார். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

மேலும் அதிமுக ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல் விவகாரம் பற்றிப் பேசிய கஞ்சா கருப்பு, 'அதிமுகவில் தற்போது நடப்பது அங்காளி பங்காளி சண்டை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்றைக்கு அடித்துக் கொள்வோம், நாளைக்கு கூடிக் கொள்வோம். விரைவில் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதிமுக பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்தார்.

பல திரைப்படங்களில் தனது வெள்ளந்திப் பேச்சாலும், நகைச்சுவை வசனங்களாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகர் கஞ்சா கருப்பு, கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து நடிகர் கஞ்சா கருப்பு அதிமுக கூட்டங்களிலும் பங்கேற்றார். 2019 உள்ளாட்சி தேர்தலின்போது, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கஞ்சா கருப்பு பிரச்சாரம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.