இந்தியா: தமிழ்நாடு

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் டெல்டாவையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், டெல்டா மாவட்ட விவசாயிகளும் கடுமையாக எதிர்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் மத்திய அரசு நிலக்கரி எடுக்க அனுமதி வழங்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான் நான் இருக்கும்வரை அது நடக்காது. மத்திய அரசு அனுமதி கொடுக்கட்டும், நிலக்கரியை யார் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம் என ஆவேசமாக சவால் விடுத்தார்.

மேலும் பேசிய அவர்,  நெய்வேலியில் நிலத்தை ஆக்கிரமிப்பது, திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன், ஈத்தேனுக்காக பூமியைத் தோண்டுவது, நிலக்கரி எடுப்பது போன்ற வேலைகளைச் செய்வது என திராவிடர்கள் ஆட்சி இருக்கும் வரைதான் இந்த ஆட்டம் நடக்கும். இன்னும் ஒரு 4 ஆண்டுகள் பொறுங்கள், அதன்பிறகு யாராவது தொடட்டும் பார்த்துக் கொள்கிறேன்' என தெரிவித்தார்.

நிலக்கரி சுரங்கங்கள் தோண்டுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், 'அந்தப் போராட்டத்தில் நான்தான் முன்னால் நிற்பேன். போராட வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உள்ளது. எங்களுடைய கோட்பாடு, என் நிலத்தை இழந்தால், நான் பலத்தை இழப்பேன். பலத்தை இழந்தால் என் இனத்தை இழப்பேன். அதனால் நான் என் தாய் நிலத்தை பேரன்பு கொண்டு காதலிக்கிறேன் என தெரிவித்தார்.