இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் டெல்டாவையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிலக்கரி திட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்...

காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிய நிலக்கரி திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தி விடும். தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை கடுமையாக பாதிப்பதோடு, உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகள் மற்றும் அனைத்து கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

ஒன்றிய அரசின் புதிய நிலக்கரி திட்டங்களை தடுக்கப்படாவிட்டால், நெற்களஞ்சியமாக விளங்கும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.

இதனை புரிந்துக்கொண்டு, தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி திட்டங்களை விரிவுபடுத்துவதை ஒன்றிய அரசு நிறுத்தாவிட்டால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறது. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, புதிய நிலக்கரி திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.