நியூசிலாந்தில் இந்த ஆண்டில் கக்குவான் இருமலால் ஒரு வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக Health New Zealand இன்று தெரிவித்துள்ளது.

கக்குவான் இருமல் என்பது நுரையீரலில் ஏற்படும் கடுமையான நுண்ணுயிர் தொற்று நோய். கட்டுப்படுத்த முடியாத கடுமையான இருமலால் மூச்சு திணறல் உண்டாகும். இது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் ஒரு தொற்று ஆகும்.

நியூசிலாந்தில் இந்த நோய் தாக்கியதால் முன்னதாக இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக கடந்த மார்ச் 9 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்திய இந்த நோய் தாக்கியதால் மற்றுமொரு குழந்தை உயிரிழந்துள்ளதாக Health New Zealand தெரிவித்துள்ளது.

இந்த தொற்று நோயால் குழந்தைகளை இழந்த மூன்று குடும்பங்களுக்கு எங்கள் இரங்கல்கள் உள்ளன என டாக்டர் வில்லியம் ரெய்ங்கர் தெரிவித்தார்.

குடும்பத்தின் மரியாதை நிமித்தம், இந்த மரணங்கள் குறித்த கூடுதல் தகவல்களை நாங்கள் வெளியிட மாட்டோம் என அவர் தெரிவித்தார்‌.

Health New Zealand கூற்றுப்படி, 2023 இல் இதுவரை 11 கக்குவான் இருமல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்ட வழக்குகள் குறைவாக இருந்தாலும், இந்த இறப்புகள் கக்குவான் இருமல் ஒரு தீவிர நோய் என்பதை அவசரமாக நினைவூட்டுகின்றன, குறிப்பாக இளைய குழந்தைகளுக்கு என்று டாக்டர் ரெய்ங்கர் கூறினார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு வாந்தியுடன் கூடிய இருமல் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

மேலும் கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுபவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது சிறந்த பாதுகாப்பு‌ என அவர் தெரிவித்தார்.