இந்தியா: தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 9வது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தனக்கே உரிய நக்கல், நையாண்டி பாணியில் மதுரையில் ஒரு தொழிலும் இல்லை என பேச ஆரம்பித்தார்.

தொழிலே இல்லாத ஊருக்கு மெட்ரோ கொண்டு வருகிறீர்கள், அமைச்சர் தங்கம் தென்னரசுவை மதுரை மக்கள் ஆஹா ஓஹோ வென பாராட்டும் படி தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் செல்லூர் ராஜூ பேசியது அமைச்சர் தங்கம் தென்னரசிற்கு கோபத்தை உண்டாக்கியது போல. இதையடுத்து சிரித்துக் கொண்டே பதிலளிக்க எழுந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, செல்லூர் ராஜூவை பங்கம் செய்துவிட்டார்.

"அண்ணண் கொஞ்ச நாளைக்கு முன்னாடி புலி வாலை பிடித்த போட்டோவை பார்த்தேன், அவரது தைரியத்தை பார்த்து நான் மட்டுமல்ல தமிழக மக்கள் அனைவரும் ஆஹா ஓஹோவென கூறினார்கள்.''

நல்ல வேளை அண்ணன் புலி வாய் இருக்கின்ற பக்கமாக நிற்காமல் புலி வால் இருக்கின்ற பக்கமாக நின்றீர்கள், மதுரைக்காரர் என்பதால் விவரம் தான் என கலாய்த்தார்.

தன்னை கலாய்ப்பது கூட தெரியாமல் அமைச்சர் பதிலை கேட்டு சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் செல்லூர் ராஜூ. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் செல்லூர் ராஜூவை அமைச்சர் பங்கம் செய்த போது அதிமுக உறுப்பினர்களே விழுந்து விழுந்து சிரித்தது தான்.