திருநங்கைகளுக்கு எதிரான இங்கிலாந்து பெண் ஆர்வலர் கெல்லி-ஜே கீன்-மின்ஷுல் (போஸி பார்க்கர்) நியூசிலாந்துக்கு மீண்டும் வருவேன் மற்றும் இந்தப் போரில் வெற்றி பெறுவேன் என்று சபதம் செய்துள்ளார்.

போஸி பார்க்கர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் திருநங்கைகளுக்கு எதிராக ஒரு பேரணியை நடத்த கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்திற்கு வந்தார்.

ஆக்லாந்தில் ஆல்பர்ட் பூங்காவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அவரது கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அந்த பேரணி கைவிடப்பட்டது.

மேலும் அவர் மீது தக்காளி சாற்றை தெளித்த பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்ப்புகள் வலுத்தை அடுத்து பார்க்கர் உடனடியாக காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டார்.

மேலும் மறுநாள் வெலிங்டனில் திட்டமிடப்பட்ட தனது பேரணியை ரத்து செய்துவிட்டு அவர் நியூசிலாந்தை விட்டு வெளியேறினார்.

பின்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "அவர் இதுவரை சென்றிராத பெண்களுக்கு மிகவும் மோசமான ஒரு இடத்தை விட்டு வெளியேறுகிறேன்" என நியூசிலாந்தை விமர்சித்தார்.

இதனிடையே இன்று காலை ட்விட்டர் நேரடி ஒளிபரப்பில் பேசிய போஸி பார்க்கர் நியூசிலாந்திற்கு நான் மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது....

"நான் திரும்பி வருவேன். இந்த போரில் நாம் வெற்றி பெறுவோம், பெண்களே"

"பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் ஒரு தைரியமற்ற கோழை."என கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் நிகழ்ச்சியில் இருந்து விமான நிலையம் வரை தன்னை அழைத்துச் சென்ற அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.