சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை திரையரங்க ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் விஜய பாஸ்கர் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து திரையரங்கிற்கு அமைந்தகரை தாசில்தார் மாதவன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், நரிக்குறவ பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்தும் திரையரங்க நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும் விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது...

"நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம்; ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் திண்டாமையை கடைபிடிப்பது ஆபத்தான போக்கு. எதிர்ப்பின் காரணமாக பின்னர் அனுமதி தந்திருந்த போதிலும், இப்படி நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என தெரிவித்துள்ளார்.