இந்தியா: தமிழ்நாடு

திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் கற்றுத்தரப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கலாஷேத்ராவை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி என கூறப்படும் ஒரு பெண், தனது பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்று பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர் எனவும் இதுபோன்று எதுவும் நடக்கவில்லை எனவும் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. ஆனால் நேற்று ரகசியமாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, அடையாறு கலாஷேத்ராவில் 3 மணி நேரமாக விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரியில் திடீர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என தேசிய மகளிர் ஆணைய குழு அறிக்கை அளித்தது.

பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் தொடர்ந்து புகாரளித்தும், சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டும், விசாரணை நடத்த வேண்டிய தேசிய மகளிர் ஆணையம் திடீரென வாபஸ் பெற்றது மாணவிகளிடையே பெரும் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து கலாஷேத்ராவில் பயிலும் அனைத்து மாணவர்களும் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அரசுக்கும் கலாஷேத்ரா கலைக்கல்லூரி மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.