இந்தியா: தமிழ்நாடு

திமுக அரசு கொண்டுவந்த காலை சிற்றுண்டி திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அந்தத் திட்டத்தில் நானும் ஒரு பயனாளி எனப் பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சட்டப்பேரவையில் நேற்றைய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'நான் எந்த மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றாலும் காலையில் சாப்பிடுவது காலை உணவு திட்டத்தில் தான். இந்த திட்டத்தில் நானும் ஒரு பயனாளி. காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஊரக பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுய உதவிக்குழு மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

அரசுப்பள்ளி மாணவர்களின் பசியைப் போக்கி கல்வி பயிலுவதை ஊக்குவிக்க 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்லும்போது, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதனைச் சுட்டிக்காட்டியே, இத்திட்டத்தில் நானும் ஒரு பயனாளி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.