இந்தியா: தமிழ்நாடு

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து இதுவரை 48 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்...

எல்லா வடிவங்களிலும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். ஏற்கனவே, ஒரு முறை நிராகரித்துவிட்டார். எனவே இந்தமுறை அவர் கையெழுத்திட்டே தீர வேண்டும்,

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம் ஆளுநருக்கு எப்படி வருகிறது? முதலில் அவர் யார்? அவரது வேலை என்ன? அவரது அதிகாரம் என்ன? அந்த பதவி எதற்கு? எட்டு கோடி மக்கள் தேர்வு செய்த அரசு கொண்டு வரும் மக்கள் நலன் திட்டத்தையும், சட்டத்தையும் ஏற்க முடியாது, ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூற ஆளுநர் யார்? இதெல்லாம் கொடுமை! ஆளுநர் நியமனத்தில் மாநில அரசின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். என்னைக் கேட்டால் ஆளுநர் நியமனமே அவசியமில்லை என்று தான் சொல்வேன்.

என்னைக் கேட்டால் அரசு ஆளுநரை மதிக்காமல் செல்ல வேண்டும். அப்படிப் போனால், என்ன செய்து விடுவார்கள். ஆளுநருக்கு ஏக்கர் கணக்கில் மாளிகை, பாதுகாப்பு சம்பளம் தருவது எல்லாம் வீண் செலவு என்றார்.