இந்தியா: தமிழ்நாடு

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உட்பட, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று‌ சென்னை, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் உட்பட 69 இடங்களில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதன்போது செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறியதாவது...

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும் இதுபோன்ற பிரச்சனைகள் வந்தன. அப்போது மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தைச் சந்தித்திருக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார். எந்த குற்றச்சாட்டையும் எதிர்கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியும் அதுபோல எதிர்கொள்ள வேண்டியதுதானே.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தார். தன்னைப் பார்த்து ராகுல்காந்தி கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விட மாட்டேன் என்று சொல்வது என்ன ஜனநாயகம்? ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் இதைத்தான் செய்தனர். இன்றைக்கு மோடியும் அதைத்தான் செய்கிறார்.

இந்த நாடு ஜனநாயக நாடு. பேச்சு உரிமை, எழுத்து உரிமை, கருத்து உரிமை உள்ள நாடு. ராகுல் காந்தி சிறு குழந்தை அல்ல, விளையாட்டுப் பிள்ளை அல்ல. வாழ்க்கையில் பலவற்றை துறந்து இந்த அரசியலுக்கு வந்துள்ளார். ராகுல் காந்தி எதையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளார். எப்போதுமே சர்வாதிகாரிகள், தோல்வியடைய தோல்வியடைய வெறிகொண்டு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அதைத்தான் பிரதமர் மோடியும் செய்துகொண்டிருக்கிறார். பாஜக தன்னுடைய புதைகுழியை, தானே தோண்டிக்கொள்வதில் ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.