இந்தியா: தமிழ்நாடு

கடந்த 25 ஆம் திகதி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற கட்சிக் கூட்டங்களில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுக அரசை பொறுத்தவரை எய்ம்ஸ் மருத்துவமனை வரக்கூடாது என்ற முடிவில் இருக்கின்றனர். ஒரு செங்கலையும் திருடிக்கொண்டு செங்கல் திருடன் ஓடிக்கொண்டிருக்கிறார். உண்மையாகவே, எய்ம்ஸ் சீக்கிரமாக வரவேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு சாராயம் விற்று சம்பாதிக்கும் பணத்தில் இருந்து 2000 கோடியை கொடுத்தீர்கள் என்றால் கட்டி விடலாம் எனப் பேசினார் அண்ணாமலை.

மேலும், இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு, ஊழலுக்கு எதிரான மாபெரும் திருவிழாவாக நடைபெறப் போகிறது. அன்றைக்கு குறிப்பாக ஒத்த செங்கல் திருடனுக்கு கச்சேரி இருக்கிறது. அதன் பிறகு தமிழ்நாட்டில் அரசியல் புரட்சி வெடிக்கும் என அண்ணாமலை பேசியிருந்தார்.

அண்ணாமலை உதயநிதி ஸ்டாலின் பற்றி அவதூறாகப் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜி.ஜி.சிவா, அண்ணாமலை மன்னிப்பு கேட்கத் தவறினால் அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.ஜி.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மார்ச் 24ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்ணியக்குறைவாக அவதூறாகப் பேசியிருப்பதை தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்து கொண்டு, மூன்றாம்தர மேடை பேச்சாளர் போல அண்ணாமலை பேசுவது அவரது அரைவேக்காட்டுத் தனத்தை காட்டுகிறது. மாநில தலைவர் என்ற பதவிக்கே தகுதியில்லாத நபர் என்பதை அண்ணாமலை அடிக்கடி அவரது திமிர் பேச்சால் காட்டி வருகிறார்.

தன்னை நேர்மையான காவல்துறை அதிகாரி என சொல்லிக்கொள்ளும் அண்ணாமலைக்கு முதலில் பொதுத்தளங்களில் எப்படி பேச வேண்டுமென அவர் சார்ந்த தேசிய கட்சி சொல்லி தர வேண்டும். தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை டெல்லி மேலிட தலைவர்கள் மாற்ற முடிவு செய்துவிட்டதை தெரிந்துகொண்டு இப்படி அநாகரீகமாக பேசி வரும் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சுக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி அண்ணாமலை மன்னிப்பு கேட்க தவறினால் அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.