ரஷ்யா உக்ரைன் போர் தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒராண்டு ஆகியும் நிறைவடையாத போர் இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்திய அரசியலால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்.

இந்தநிலையில் உக்ரைன் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக தொடரப்பட்ட போர்க்குற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கடந்த 17ம் திகதி கைது வாரண்ட் பிறப்பித்தது.

இந்நிலையில் விளாடிமிர் புடினை வெளிநாட்டில் கைது செய்ய முயற்சிப்பது, ரஷ்யாவால் "போர் பிரகடனமாக" பார்க்கப்படும் என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார்.

2008 மற்றும் 2012 க்கு இடையில் அதிபராக பணியாற்றிய டிமிட்ரி மெட்வடேவ், தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக இருக்கிறார்.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறும்போது..

புடினை கைது செய்தால் ரஷ்ய ஆயுதங்கள், கைது செய்யப்பட்ட நாட்டை தாக்கும். ஒரு கற்பனை செய்வோம் - இது ஒருபோதும் நடக்காத விஷயம் என்றாலும், அது நடக்கும் என்று கற்பனை செய்வோம்.

ஒரு அணுசக்தி அரசின் தற்போதைய தலைவர் (புடின்) ஜெர்மனியின் எல்லைக்கு வந்து கைது செய்யப்படுகிறார். இது என்ன? ரஷ்ய கூட்டமைப்புக்கு எதிரான போர்ப் பிரகடனம். இது நடந்தால், எங்கள் வழிகள் அனைத்தும், ராக்கெட்டுகள் மற்றும் பிற ஏவுகணைகள் அந்நாட்டின் அதிபர் அலுவலகத்தின் மேல் பறக்கும் என்று கூறினார்.