இந்தியா: தமிழ்நாடு

சமத்துவ மக்கள் கட்சியின் 7வது பொதுக்குழு ஈரோட்டில் இன்று நடைபெற்றது.

அதில் முறைப்படி போட்டியின்றி 7வது முறையாக அக்கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரத்குமார் மிக உற்சாகமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான கேள்விகளை தவிர்த்த அவர் வட மாநிலத்தவர்கள் விவகாரம், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தெல்லாம் விளக்கமாக பேசினார்.

அந்த வகையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் 2 மாதங்களில் நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் நன்றாக இருக்கும் எனவும் கூறினார். அதைத் தொடர்ந்து வட மாநிலத்தவர்கள் பிரச்சனை பற்றி பேசிய அவர், வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதில் தவறேதும் இல்லை என்றும் ஆனால் அவ்வாறு வருபவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் முறைப்படி சேகரித்து பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வட மாநிலத்தவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் பதிய வேண்டும் என இன்று நேற்றல்ல 12 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதாகவும் இப்போதும் அதையே தான் தாம் கூறுவதாகவும் தெரிவித்த சரத்குமார் யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் எளிதாக தப்பிப்பதை தடுக்க முடியும் என்பதற்காகவே இதைக் கூறுவதாக விளக்கமும் அளித்தார்.

12 ஆண்டுகளுக்கு முன்
வட மாநிலத்தவர்களின் விவரங்களை காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என அப்போது தாம் கூறிய போது பலரும் தன்னை வித்தியாசமாக பார்த்ததாகவும் ஆனால் இன்று தாம் சொல்லியபடி தான் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடந்து வருவதாகவும் கூறினார்.