பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத்தில் ஓய்வூதிய சீர்திருத்த மசோதா அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62-ல் இருந்து 64 ஆக மாற்ற வழிவகை செய்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த மசோதாவுக்கு அந்த நாட்டின் மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் தூய்மை பணியாளர்களும் கடந்த சில தினங்களாக தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தலைநகரான பாரீசில் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மேலும் நகரின் முக்கிய சாலைகள், வீதிகள் குப்பைகளால் நிரம்பி துர்நாற்றம் அடிக்கிறது. சுமார் 7 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படாமல் கிடப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.