இந்தியா: தமிழ்நாடு

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரே, பிரச்சினை இருந்து வருகிறது. இடையில் சில காலம் மட்டும் ஆட்சியில் இருந்த சமயத்தில் ஓபிஎஸ், எடப்பாடி இரட்டை தலைமையின் கீழ் கட்சி செயல்பட்டது.

இப்போது கடந்த சில மாதங்களாகவே இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து உரசல் நிலவி வருகிறது. ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தனித்தனியாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் எடப்பாடியை அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யும் நடவடிக்கை நடந்து வந்தது. அதன்படி நேற்று முன்தினம் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார்.

இன்று மாலை வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் நிலையில், வரும் மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த தேர்தல் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. முதல் நாளான நேற்றே எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து மற்றவர்கள் போட்டியிட வாய்ப்புகள் குறைவு என்பதால் அவர் போட்டியின்றி தேர்வாகவே அதிக வாய்ப்பு உள்ளது.

எடப்பாடி தரப்பின் இந்த திடீர் முடிவால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியது. மேலும், தேர்தல் ஆணையத்திடமும் முறையிட உள்ளனர். இதனிடையே நேற்றைய தினம் சென்னை ஐகோர்டில் மனோஜ் பாண்டியன் முறையீடு செய்தார்.

இரட்டைத் தலைமையை ஒழித்து ஒற்றைத் தலைமையை உருவாக்கிக் கொண்டுவரப்பட்ட, தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி, இதை அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்துள்ளார்.

அதன்படி, இந்த மனுவை விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை நீதிபதி கே.குமரேஷ் பாபு இன்று விசாரிக்கிறார்.

இன்று காலை 10 மணியளவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.