இந்தியா: தமிழ்நாடு

திருச்சி கண்டோன்மெண்ட் ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இறகுப்பந்து மைதானத்தை அமைச்சர் நேரு புதன்கிழமை திறந்து வைத்தார்.

அப்போது இந்த திறப்பு விழா கல்வெட்டில் எம்.பி.சிவா பெயர் சேர்ப்பது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து எம்.பி.சிவா வீட்டில் புகுந்து அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கார், இருசக்கர வாகனம், மின்சார விளக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. அங்கிருந்த சிவாவின் ஆதரவாளர்களும் தாக்கப்பட்ட நிலையில் அவர்களை போலீஸார் அழைத்துச் சென்று செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

ஆனால் அங்கும் நேருவின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் உள்ளே புகுந்து அவர்களைக் கடுமையாகத் தாக்கினர். காவல் நிலையத்திற்குள் இருந்த நாற்காலியை எடுத்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் வீசியுள்ளனர். இந்த தாக்குதலை தடுத்த பெண் காவலர் சாந்தி காயமடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சசிகலாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா கூறுகையில், தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் சட்டம் - ஒழுங்கு சுத்தமாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.