ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் கடந்தாண்டு உக்ரைன் நாட்டிற்கு எதிராகப் போரைத் தொடங்கினார். இந்த போர் ஓராண்டைக் கடந்துவிட்ட போதிலும், இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் உக்ரைனில் நடக்கும் போர்க் குற்றங்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினே பொறுப்பு என்று குற்றம் சாட்டி நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் (ஐசிசி) ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்துள்ளது.

போர்க் காலத்தில் குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பகீர் குற்றச்சாட்டுகள் புதின் மீது வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக ரஷ்ய அதிபர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவுக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வழக்கம் போல ரஷ்யா இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும், சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை என்பதால் பிடியாணை செல்லாதது என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

இருப்பினும், உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களில் புதின் மீது குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக ஐநா கூறியுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியது முதலே அங்குப் போர்க் குற்றங்கள் நடந்ததாகவும் இதற்கு புதினே முக்கிய காரணம் என்றும் ஐநா தரப்பில் கூறப்படுகிறது.

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாகக் குழந்தைகளை நாடுகடத்துதல் உள்ளிட்ட போர்க்குற்றத்திற்கு புதினே பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. புதின் நேரடியாக அல்லது மற்றவர்களுடன் இணைந்து இந்த குற்றங்களைச் செய்திருக்கலாம். அல்லது அவர் தனது ராணுவ அதிகாரிகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது மட்டுமின்றி உக்ரைனில் நடந்த பலாத்காரம், சித்திரவதை தவிர, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் உள்ளிட்ட அனைத்திற்கும் ரஷ்யாவே பொறுப்பு என்று ஐ.நா விசாரணைக்குழு கூறியுள்ளது.

புதின் ரஷ்யாவில் சர்வ வல்லமை பொருந்திய நபராக இருந்து வருகிறார். அங்கு உச்சபட்ச பதவியில் இருக்கும் புதினுக்கு எதிரிகள் யாருமே இல்லை. இதனால் அவர் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பே இல்லை. புதின் ரஷ்யாவில் இருக்கும் வரை, அவர் கைது செய்யப்படும் அபாயம் இல்லை. ரஷ்யாவுக்கு வெளியே வந்தால், வேறு நாடு அவரை கைது செய்ய வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், எந்தவொரு நாடும் புதினை கைது செய்யாது என்றே கூறப்படுகிறது.