இந்தியா: தமிழ்நாடு

சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக, பாஜகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதால் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தனர்.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து பாஜகவைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் நேற்று முன்தினம் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தினேஷ் ரோடி மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், அவர் பதவியில் தொடருவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இரவில் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு அதிகாலையில் அது ரத்து செய்யப்பட்ட சம்பவம் பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்தது கண்டனத்திற்குரியது. தலைவர்கள் தொண்டர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதிமுக கிளர்ந்தெழுந்தால் என்ன ஆகும். அதிமுக அறிவுறுத்திய பின், இபிஎஸ் புகைப்படத்தை எரித்தவர்களை இடைநீக்கம் செய்தீர்கள். ஆனால் அதனை மீண்டும் ரத்து செய்தது ஏன்? இடைநீக்கம் செய்தது கண் துடைப்பு நடவடிக்கையா? கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். அது நல்லதல்ல என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிமுகவை பொறுத்தவரை கட்சி மீதும், தலைவர்கள் மீதும் விமர்சனம் வைத்தால் எதிர் விமர்சனங்கள் வைக்கப்படும். அதிமுக - பாஜக கூட்டணியை பொறுத்தவரை தொடர்ந்தே வருகிறது. ஆனால் தொண்டர்களை கட்டுப்படுத்துவது தலைமையின் பொறுப்பு. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக் கூடாது. அப்படி செய்தால், அதிமுகவுக்கும் எதிர்வினையாற்ற தெரியும்.

இடைநீக்கத்தை ரத்து செய்தது, அவர் செய்த செயலை ஊக்கப்படுத்துவது போலாகும். அது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.