ஜப்பானைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் யோஷிகாசு ஹிகாஷிதானி. ஜப்பான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக வலம் வந்த இவர் கடந்த ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்வானார்.

ஹிகாஷிதானி அங்கு ஒரு சிறிய கட்சியில் உறுப்பினராக உள்ளார்.அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத நிலையில், அவருக்குக் கடைசியாக ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இருப்பினும், அதற்கும் நேரில் ஆஜராகாமல் வீடியோ மூலமே விளக்கம் அனுப்பியிருந்தார்.

இதனால் நாடாளுமன்ற ஒழுங்கை சீர்குலைத்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற தலைவரான உத்தரவிட்டார்.

ஜப்பானில் இப்போது இருக்கும் அரசியல் சாசன சட்டம் 1947இல் கொண்டு வரப்பட்டது. இதுவரை வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே எம்பி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 1951க்கு பிறகு 70 ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்பியாக ஹிகாஷிதானி மாறியுள்ளார்.

GaaSyy என்று அழைக்கப்படும் இவருக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனை அங்கு மிகக் கடுமையான ஒன்றாகும்.

ஜப்பான் நாடாளுமன்றத்தில் ஹிகாஷிதானி கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்பியை தவிர ஹிகாஷிதானியை தகுதி நீக்கம் செய்ய ஆதரவாக 235 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர்.

ஜப்பான் நாடாளுமன்றத்திற்குத் தேர்வானது முதலே ஜூலை 2022 முதல் ஹிகாஷிதானி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தான் வசித்து வருகிறார். நாடாளுமன்றத்தில் எம்பி சம்பளமாக அவர் 19 மில்லியன் யென் ($140,000) ஊதியம் பெற்றுள்ளார்.

இருப்பினும், ஒரு நாளும் நாடாளுமன்றத்திற்கு அவர் வந்ததே இல்லை.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், ஹிகாஷிதானி முதலில் ஜப்பான் நாடாளுமன்றத்திற்குக் கடந்த வாரம் நேரில் சென்று மன்னிப்பு கேட்கவிருந்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்ட அவர் துருக்கிக்குச் சென்றார்.

ஜப்பான் திரும்பினால், போலி வழக்கில் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்றும் இதன் காரணமாகவே ஜப்பான் வரவில்லை என்றும் ஹிகாஷிதானி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மேல் சபை தேர்தலுக்கு முன்னதாக அவர் தனது யூடியூப் சேனலில் பிரபலங்கள் பற்றி வதந்திகள் வெளியிட்டும் ட்வீட் செய்தும் வந்தார். இந்த வழக்கில் போலீசார் அவரை ஏற்கனவே விசாரித்து இருந்தனர். இந்த வழக்கில் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் அவர் ஜப்பான் திரும்பவில்லை.