இந்தியா: தமிழ்நாடு

கடந்த 1956ம் ஆண்டு நாட்டின் நவரத்தின பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டதுதான் என்எல்சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். இந்தியா தனது மின்சார தேவைக்கு பெரும்பாலும் அனல்மின் நிலையங்களையே நம்பி இருக்கிறது. எனவே என்எல்சியின் வளர்ச்சியும் கடந்த காலகட்டத்தில் அபரிமிதமாக இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 30 கோடி டன் அளவுக்கு நிலக்கரியை உற்பத்தி செய்கிறது.

எனவே நிறுவனம் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2006ம் ஆண்டு இதேபோல விரிவாக்க பணிகளுக்கு நெய்வேலியின் சேத்தியார் தோப்பு பகுதிக்கு உட்பட்ட மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி மற்றும் கரிவெட்டி ஆகிய கிராமங்களிலிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்நிலங்களை கையகப்படுத்தப்பட்டதோடு அந்நிறுவனம் நின்றுவிட்டது. அதன் பின்னர் எந்த விரிவாக்க பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் இவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணிகளை தற்போது என்எல்சி தொடங்கியுள்ளது.

இந்நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி முழு, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவை அறிவித்திருக்கின்றன.

இதனை தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசியிருந்த சீமான்...

ஏற்கெனவே நிலங்களை வழங்கியவர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டதோ அதே அளவுக்கு இழப்பீடு தற்போது நிலங்களை வழங்கியவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். அதேபோல நிலங்களை வழங்கிய குடும்பங்களில் தலா ஒருவருக்கு என்எல்சியில் வேலை வழங்கப்பட வேண்டும். ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போதுதான் சீரமைக்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் புதியதாக எந்த நிலங்களும் கைப்பற்றப்படக் கூடாது.

இதனை மீறி நிறுவனத்தை விரிவுபடுத்துகிறோம் என்று கூறி மேலும் புதிய நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம் இதை விட பேரெழுச்சியாக நடைபெறும் என்று கூறியுள்ளார்.