நடிகர் மயில்சாமியின் மரணத்தை அடுத்து அவருடைய மகன்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது அவர்கள் கூறுகையில்...

அப்பா இறந்தவுடன் சாலிகிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டன. ஏனென்றால் எங்கள் அப்பா ஷூட்டிங் போக வீட்டில் இருந்த நேரத்தை விட சாலிகிராமத்தில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் என்ன பிரச்சினை என பார்த்து பார்த்து அதை அதிகாரிகளை வைத்து சரி செய்வார்.

எல்லா கடைகளுக்கும் செல்வார். எல்லாருடனும் நன்றாக பழகுவார். எனவேதான் அந்த கடைக்காரர்களே இரு நாட்களாக தங்கள் கடைகளை மூடிவிட்டு பிழைப்பை விட்டுவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு எல்லாம் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் என்றனர்.

அது போல் இளைய மகன் யுவன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்...

ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால் அதன் பிறகு சாமியானா பந்தல், நாற்காலிகள், வந்தவர்களுக்கு உணவு, டீ, காபி உள்ளிட்டவைக்கான செலவுகள் இருக்கும். ஆனால் வந்தவர்களை நாங்கள் சாப்பிட்டீர்களா என கூட கேட்கவில்லை.

ஆனால் அப்பா இறப்புக்கு வந்தவர்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு போயிருக்கிறது, பத்திரிகை, போலீஸ் துறையினருக்கும் உணவும், டீ, காபியும் போயிருக்கிறது.

இதுவரை இதற்கான செலவு பில்லுடன் யாரும் வரவில்லை. இவற்றையெல்லாம் யார் செய்தார்கள் என்றே தெரியவில்லை.

சாமியானா பந்தல், உணவு, டீ, காபி செலவுத் தொகையை கொடுக்க பணத்துடன் நாங்கள் காத்து கிடக்கிறோம், ஆனால் யாரும் வந்து எங்களிடம் பணம் கேட்கவே இல்லை. எல்லாமே அதிசயமாக இருக்கிறது என நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் தெரிவித்துள்ளார்.

மயில்சாமி தனது குடும்பத்தினருக்கு பணம் காசு சேர்த்து வைத்தாரோ இல்லையோ நல்ல மனிதர் என்ற பெயரையும் நல்ல மக்களையும் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

57 ஆண்டுகள் மயில்சாமி எப்படிப்பட்டவர் என்பது கடந்த 19, 20 தேதிகளில் தெரிந்துவிட்டது.