பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் இன்று நேப்பியர், Esk Valley மற்றும் Hawke's Bay இன் பிற பகுதிகளுக்கு அவசரநிலை மேலாண்மை அமைச்சர் கீரன் மெக்அனுல்டி, நேப்பியர் எம்பி ஸ்டூவர்ட் நாஷ் மற்றும் Ikaroa-Rāwhiti எம்பி மேகா வைதிரி ஆகியோருடன் பயணித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு, கேப்ரியல் சூறாவளி குறித்த புதுப்பிப்பை வழங்கிய பிரதமர் கூறுகையில்...

நேப்பியரில் இன்னும் மின்சாரம் இல்லை, ஆனால் அதனை மீட்டெடுக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கூடிய விரைவில் மின்சாரம் மீட்டெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

விளைநிலங்கள், பழத்தோட்டங்கள் மற்றும் பயிர்களையும் அழித்த வெள்ள நீர் வெளியேற வழியின்றி சிக்கிக்கொண்டு இருந்ததை பார்த்ததாக அவர் கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு மற்றும் இதர பொருட்கள் சாலை மற்றும் கடல் வழியாக வந்துகொண்டிருப்பதாக கூறினார்.

கேப்ரியல் சூறாவளி முழு நாட்டையும் எந்தளவுக்கு பாதிக்கப் போகிறது என்பதை நான் இன்று நேரடியாகப் பார்த்தேன். அது நமது உணவு விநியோகத்தின் சில பகுதிகளை சீர்குலைக்கும்.‌ எனவே நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், கேப்ரியல் சூறாவளி ஒரு "பெரிய பேரழிவு நிகழ்வு" என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்தார்.

பிரதமர் இன்று காலை நேப்பியர் விமான நிலையத்திலிருந்து ஹேஸ்டிங்ஸில் உள்ள Hawke's Bay Emergency Coordination Center க்கு வந்து, மையத்தை சுற்றிப்பார்த்தார்.

பின்னர் Esk Valley இற்கு செல்வதற்கு முன்பு நேப்பியரின் சிவில் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டார்.

இது சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நூற்றாண்டில் நாம் கண்ட மிகப் பெரிய இயற்கை பேரழிவாகும். சேதத்தின் அளவு கணிசமானது.‌அது சரியாகக் கையாளப்படுவதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்பதை நாங்கள் அறிவோம் என அவர் தெரிவித்தார்