துருக்கி, சிரியாவை அதிர வைத்த கொடூர நிலநடுக்கத்தை அடுத்து இரவு பகலாக மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நேற்று வரை சுமார் 200க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

கட்டிட இடிபாடுகளில் இருந்து கொத்து, கொத்தாக சடலங்கள் மீட்கப்படுகின்றன.

இதனிடையே, துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் மொத்த பலி எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இடிந்த விழுந்த தளங்களுக்குள் சிக்கியவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூக்குரலிடுகின்றனர். இடிபாடுகளுக்கு வெளியில் இருப்பவர்களுக்கு கூக்குரல்கள் கேட்ட போதிலும், எதுவும் செய்ய முடியாமல், காப்பாற்ற முடியாமல் தவிக்கும் காட்சிகள் வேதனை அளிக்கின்றன.

இந்நிலையில் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 15 வயது சிறுமி, வெளியில் அமர்ந்திருக்கும் தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த காட்சி, காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய பேரழிவு என உயிர்தப்பிய மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.

பல குழந்தைகள் பெற்றோர், குடும்பத்தினரை இழந்து அநாதைகளாகி உள்ளனர்.வீடுகளையும் உறவுகளையும் ஒருநாள் இரவில் இழந்து விட்டதாகவும் மக்கள் கண்ணீருடன் பேட்டி அளித்து வருகின்றனர்.