போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த Rafeiro do Alentejo இனத்தை சேர்ந்த 30 வயதான நாய் உலகின் மிகவும் வயதான நாய் என்கிற கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறது.

பாபி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாய்க்கு பெப்ரவரி ஒன்றாம் திகதி நிலவரப்படி 30 ஆண்டுகள் 266 நாட்கள் ஆகிறது.

இதற்கு முன்னர் 29 ஆண்டுகள் 150 நாட்கள் வாழ்ந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாய்தான் உலகின் மிக அதிக வயது வரை வாழ்ந்த நாய் என்கிற சாதனையை புரிந்திருந்தது.

ஆனால் பாபி இந்த சாதனையை முறியடித்திருக்கிறது.

இது குறித்து பாபியின் உரிமையாளர் கூறுகையில்...

நாங்கள் பாபியை 1992ம் ஆண்டிலிருந்து வளர்த்து வருகிறோம்.

இது 1992ம் ஆண்டு பிறந்ததற்கு அப்போதைய நகராட்சி அலுவலகத்தில் நாங்கள் சான்றிதழையும் பெற்றிருக்கிறோம்.

மட்டுமல்லாது போர்த்துக்கீசிய அரசாங்கத்தின் செல்லப்பிராணிகளுக்கான பதிவேட்டிலும் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பாபி ஒரு அற்புதமான செல்லப் பிராணி. ஏனெனில் இது பூனையுடன் தன்னுடைய உணவை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு மிகவும் பொறுமைசாலி.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஒரு கோடைக்காலத்தில் எனக்கு எட்டு வயதாக இருக்கும்போது இவன் பிறந்தான். இவனை நாங்கள் இதுவரை சங்கிலியால் கட்டி வைத்ததே கிடையாது. வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் விட்டுவிடுவோம். ஒரே குரலில் எங்கிருந்தாலும் வந்துவிடுவான்.

கடந்த 30 ஆண்டுகளாக எங்களுடைய சுக துக்கங்களில் இவன் பங்கெடுத்திருக்கிறான். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் இவனுக்கு வயதாகிவிட்டது. இப்போதும் கூட தோட்டத்தில் பூனைகளுடன் சுற்றித்திரிகிறான். வீட்டினுள் வரும்போது பொருட்களுடன் அடிக்கடி மோதிக்கொள்கிறான்.

இருப்பினும் சாப்பிட்டுவிட்டு அமைதியாக உறங்க சென்றுவிடுகிறான். பரிசோதனை செய்து பார்த்ததில் அவனுடைய கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவன் இவ்வளவு ஆண்டுகள் உயிருடன் இருப்பதற்கு காரணம் தண்ணீர்தான் என்று நினைக்கிறேன். ஒருநாளைக்கு சராசரி அளவை விட அதிகமாகவே தண்ணீர் குடிக்கிறான். அதேபோல சலிக்காமல் இறைச்சியை உண்ணுகிறான். கடந்த 2018ம் ஆண்டு திடீரென பாபிக்கு உடல்நலம் மோசமானது. அவன் நிச்சயம் உயிர்பிழைக்க மாட்டான் என்று எங்களுக்கு தோன்றியது. ஆனால் அதையெல்லாம் கடந்து பாபி வந்துவிட்டான்.
சமீபத்தில் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவனுடைய உடல்நலம் சிறப்பாக இருப்பதாகவே மருத்துவர்கள் கூறியுள்ளனர். பொதுவாக இந்த வகை நாய்கள் போர்ச்சுக்கல்லில் மட்டுமே காணப்படும்.

இது அடர்ந்த குளிரையும் பனியையும் தாங்கும் திறன் கொண்டது என்று இதன் உரிமையாளரான 38 வயதான லியோனல் கோஸ்டா கூறியுள்ளார்.