பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்திப்பதற்காக அடுத்த வாரம் செவ்வாய்கிழமை ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவிற்கு செல்வதாக உறுதி செய்துள்ளார்.

இன்று பிற்பகல் ஒரு அறிக்கையில், பிரதமர் அலுவலகம் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியது.

அவர் பிரதமராக பதவியேற்ற பிறகு ஒரு சர்வதேச தலைவருடனான அவரது முதல் சந்திப்பு இதுவாகும்.

ஜசிந்தா ஆர்டெர்னின் பதவி விலகலை அடுத்து தொழிற்கட்சித் தலைவர் பதவிக்கு ஹிப்கின்ஸ் நியமனம் செய்யப்பட்டதை உறுதி செய்த சிறிது நேரத்திலேயே இரு தலைவர்களும் தொலைபேசி ஊடாக பேசினர்.

இந்நிலையில் பிரதமர் ஹிப்கின்ஸ் செவ்வாய்க்கிழமை காலை பாதுகாப்புப் படை விமானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல உள்ளார்.

"பிரதமர் ஆன பிறகு நான் பேசிய முதல் சர்வதேச தலைவர் பிரதம மந்திரி அல்பனீஸ் ஆவார், மேலும் உலகப் பொருளாதார சவால்களுக்கு எதிராக நமது பொருளாதாரங்களைப் பாதுகாப்பதற்கு நாம் மேலும் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது குறித்து நேரில் எங்கள் விவாதத்தைத் தொடர எதிர்பார்க்கிறேன்" என்று பிரதமர் ஹிப்கின்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 "இருதரப்பு உறவுகளில் நமது பல பகிரப்பட்ட பாதுகாப்பு முன்னுரிமைகள் மற்றும் பசிபிக் மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியங்களில் எங்கள் ஈடுபாடு பற்றி விவாதிக்க நான் எதிர்நோக்குகிறேன்." என அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பொருளாதார ஒப்பந்தம் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைகிறது, மேலும் இரு நாடுகளுக்கும் இடையே உயர்ஸ்தானிகராலயம் நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்நிலையில் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நியூசிலாந்தின் உயர்மட்ட அமைச்சர்கள் அடங்கிய குழு இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.