அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியா இராணுவ வீரர்களை நோக்கி 300 பேர் கொண்ட படையோடு சீனா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக எல்லை பகுதிகளை ஆக்கிரமித்தும் இருக்கிறது.

இதனால் இந்தியா சீனா இடையே மோதல் போக்குகள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன

இந்நிலையில் சீன எல்லையோரத்தில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்தியா மற்றும் சீன இராணுவ வீரர்கள் வழக்கம்போல் கடந்த 9 ஆம் திகதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருநாட்டு இராணுவ வீரர்களை நோக்கி சீன படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் இரு நாட்டு இராணுவ வீரர்களுக்கு மத்தியில் மோதல் எற்பட்டு ஒருவர் மீது ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் இருநாட்டு இராணுவ வீரர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்த சிறிது நேரத்திலேயே, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய இராணுவ அதிகாரிகள் மற்றும் சீன இராணுவ அதிகாரிகள் அமர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் இரு நாட்டு இராணுவ வீரர்களை அமைதிப்படுத்துவது மற்றும் தாக்குதல் நடந்த இடத்தில் இயல்பு நிலையை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

9 ஆம் திகதி நடந்த இரு தரப்பு மோதல் குறித்த தகவல் 3 நாட்கள் கழித்து நேற்று வெளியான நிலையில் இதில் சீனாவுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை எனவும் சீனா முன் ஏற்பாட்டுடன் 300 வீரர்களை தாக்குதலுக்காக தயார்படுத்தி கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், சுதாரித்துக் கொண்ட இந்திய படையினர் பதில் தாக்குதல் நடத்தி சீன இராணுவத்தை விரட்டியத்துவிட்டதாகவும், இதனை சீன படையினர் துளி கூட எதிர்பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது.