முதலமைச்சரும், தி.மு.க. கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பல தமிழ் சினிமாக்களிலும் நடித்து பிரபலமானவர்.

கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

கட்சியிலும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அவருக்கு அமைச்சர்களும், கட்சியின் முன்னணி தலைவர்களும், மாவட்ட நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் பேசிய சில அமைச்சர்கள், 'உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.

இதுதவிர பல மாவட்டங்களில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

ஏற்கனவே தொகுதியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டால் தமிழக மக்கள் அனைவருக்கும் சேவையாற்றுவார் என்று சில அமைச்சர்கள் மற்றும் தி.மு.க.வினரும் கருத்து தெரிவித்தனர்.

இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

விழாவில் கலந்துகொள்வதற்காக 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழக அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டு புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இணைகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சேர்த்து தமிழக அமைச்சரவையில் மொத்தம் 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதால் அது 35 ஆக உயரும்.