ரஷ்யா அதிபர் புதின் உடல்நிலை தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல் அதிர்ச்சி தருவதாகவே உள்ளது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தின் அவரின் உடல்நிலை குறித்த புலனாய்வு அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

70 வயதான புதின் மேற்கொண்ட சிகிச்சை குறித்த விவரங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ரஷ்ய புலனாய்வு செய்தி நிறுவனம் ஒன்று, புதின் பலமுறை மான் கொம்புகளில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் குளியல் கொள்கிறார் என அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் அதிபர் புதினின் இந்த செயல், விலங்குகள் வதைபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால், ரஷ்ய அதிபரின் மருத்துவச் சிகிச்சைக்கு இந்த ரத்த குளியலால் நன்மைகள் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர்.

இருப்பினும்‌ அதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.

தைராய்ட் புற்றுநோய் மருத்துவர் ஒருவர் கடந்த 166 நாட்களில் 35 முறை, அதிபர் புதினை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்ததாகவும், நோய் தீவிரமான நேரங்களில் புதினின் அரசுப் பயணங்களில் கூட அவருடன் அந்த மருத்துவர் சென்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த மருத்துவர் தைராய்ட் புற்றுநோயில் நிபுணத்துவம் பெற்றவரும் கேன்சர் அறுவை சிகிச்சை நிபுணராணருமான யெவ்ஜெனி செலிவானோ என இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

ரஷ்யாவில் இருக்கும் தலைசிறந்த கேன்சர் மருத்துவர்களில் இவரும் ஒருவர் ஆவர்.

இந்தாண்டு தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் நோய் சிகிச்சையில் ஒரு மாற்று மருந்தாக மான் கொம்பு ரத்தத்தில் குளியல் மேற்கொண்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.

ஆங்கில மருத்துவத்தில் அவரது உடல்நிலை எதிர்பார்த்த அளவுக்கு வேகமாகக் குணமடையவில்லை எனத் தெரிகிறது. இதனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் பரிந்துரையின் பேரில் அறிவியல் பூர்வமற்ற இந்த மாற்று மருந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற ரத்த குளியலை புதின் மட்டுமல்ல, மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் மற்றும் காஸ்ப்ரோம் தலைவர் அலெக்ஸி மில்லர் உட்பட ரஷ்யாவின் உயர்மட்ட தலைவர்கள் வட்டத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகள் மேற்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மான் கொம்பு ரத்தத்தில் குளிப்பது ரஷ்யா, சீனா மற்றும் கொரியாவில் பழங்கால பாரம்பரியமாகும்.

இருப்பினும், சைபீரியாவைச் சேர்ந்த அல்தாயின் சிவப்பு மான் கொம்புகளின் ரத்தம், உடல் புத்துணர்ச்சிக்கு உதவும் என்பதற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை.

ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட ஒரு ஊடக நிறுவனமான Proekt மூலம் ஆன்லைனில் இந்த முழு விசாரணை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

புதினின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த வதந்திகள் மற்றும் ஊகங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பரவி வருகின்றன.