ஒரு தம்பதியினர் தங்கள் 4 மாத குழந்தைக்கு உடனடியாக இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதாகவும், ஆனால் அறுவை சிகிச்சைக்கு தேவையான இரத்தத்தை தடுப்பூசி செலுத்தியவர்களிடம் இருந்து பெறுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது Health NZ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில் குழந்தையின் பாதுகாவலாராக இருக்கும் உரிமையை அந்த பெற்றோரிடம் இருந்து பறித்து, நீதிமன்றம் அந்த உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் மீதான விசாரணை இன்று ஆக்லாந்து உயர் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது.

Health NZ இன் வழக்கறிஞர் பால் வைட் வாதாடுகையில்..

குழந்தைக்கு அன்பான பெற்றோர்கள் இருப்பதாகக் கூறினார், ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் மருத்துவ அறிவியலுக்கு மாறாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக இரத்த தானம் செய்யப்படும் போது தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் என பிரிக்கப்படுவது இல்லை என்றும், தடுப்பூசி செலுத்தியவர்களின் இரத்தத்தை பெறுபவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் நியூசிலாந்து இரத்த தான கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று தடுப்பூசிக்கு எதிரான  போராட்டக்காரர்கள் சுமார் 150 பேர் நீதிமன்றத்திற்கு வெளியே குடும்பத்திற்கு ஆதரவாக இருந்தனர்.