தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என பொலிஸாரின் பேஸ்புக் பதிவில் கமெண்ட் செய்தவரிடம், 'நீ அங்கேய இரு, வந்துட்டுருக்கோம்' என்ற பாணியில் பொலிஸார் பதிலளித்துள்ளமை பலரையும் ஈர்த்துள்ளது.

நாம் பார்க்கும் வேலைக்கான தகுந்த அங்கீகாரம் உரிய நேரத்தில், உரிய இடங்களில் சரியாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். மேலும் பொதுவாக கிடைக்க வேண்டிய மரியாதையிலும் முக்கியத்துவத்திலும் கூட எந்தவித சமரசத்தையும் ஏற்காத மனப்பான்மையையே எல்லோரும் வைத்துள்ளனர்.

அதுபோன்றுதான் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் காவல்துறையினர் தங்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் பதிவிட்ட 'மிகவும் தேடப்படும் குற்றவாளிகள்' என்ற பட்டியலில் தனது பெயர் இல்லை என்று ஒரு குற்றவாளி கமெண்ட் செய்ததால், அவருக்கு ஏற்பட்ட விளைவு இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

ராக்டேல் கவுண்ட் செரிஃப் அலுவலகம் தனது பேஸ்புக் பக்கத்தில் மிகவும் தேடப்படும் முதல் 10 குற்றவாளிகளின் பட்டியலை அவர்களின் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தது.

அந்த பதிவில் கிறிஸ்டோபர் ஸ்பால்டிங் என்பவர்‌ "இதில் நான் எங்கே" என்று தொனியில் பதிவிட்டிருந்தார். 

இதை பார்த்த அதிகாரிகள் "நீங்கள் சொல்வதும் சரிதான். உங்கள் மீதும் இரண்டு பிடியாணைகள் உள்ளன. உங்களை பிடிக்க வந்து கொண்டு இருக்கிறோம்" என்று பதிலளித்திருந்தனர்.

தொடர்ந்து கிறிஸ்டோபரை அதிகாரிகள் கைது செய்தனர்.  

கிறிஸ்டோபர் மீது சில விதிமீறல் வழக்குகள்தான் உள்ளன.

அதிகாரிகள் வெளியிட்ட பட்டியலில் இருப்பவர்கள் கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, மோசமான தாக்குதல் மற்றும் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

அதனால்தான் கிறிஸ்டோபர் பெயர் அதில் இல்லை. தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் தனது பெயர் இல்லாததை கண்டு வேடிக்கையாக கிறிஸ்டோபர் போட்ட கமெண்ட் அவரை சிறைக்கு அனுப்பிய இந்த சம்பவம் இணையத்தில் பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.