இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடித்து, 1.5 கிலோமீற்றர் தூரத்திற்கு சாம்பலை கக்கியது. இதையடுத்து வெடிப்பு பகுதியிலிருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்

எரிமலை வெடிப்பு குறித்து அதிகாரிகள் தங்கள் மிக உயர்ந்த எச்சரிக்கையை வெளியிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள எரிமலைக்கு அருகில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பேரிடர் தணிப்பு நிறுவனம், BNPB, எரிமலைக்குழம்பு பாயும் அபாயம் காரணமாக, எரிமலை வெடிப்பு மையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் ஆற்றங்கரைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்குமாறும் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.

எரிமலை வெடிப்புக்குப் பிறகு சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் கண்காணித்து வருவதாக அந்நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ளது.

142 எரிமலைகள் காணப்படும் இந்தோனேசியாவில் 8.6 மில்லியன் மக்கள் எரிமலைகளுக்கு 10 கிமீ தொலைவில் வாழ்கின்றனர்.